அரவக்குறிச்சி -கரை புரண்டு ஓடும் குடகனாற்றால் விவசாயிகளின் கண்ணீர் தீர்ந்தபாடு இல்லை.

அரவக்குறிச்சி -கரை புரண்டு ஓடும் குடகனாற்றால் விவசாயிகளின் கண்ணீர் தீர்ந்தபாடு இல்லை.
அரவக்குறிச்சி -கரை புரண்டு ஓடும் குடகனாற்றால் விவசாயிகளின் கண்ணீர் தீர்ந்தபாடு இல்லை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் அமராவதி ஆறு, நங்காஞ்சியாறு, குடகனாறு என மூன்று நதிகள் இருந்த போதும், ஆண்டு முழுவதும் மூன்று ஆறுகளிலும் கடைமடை பகுதியான அரவக்குறிச்சி பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை. ஆண்டு முழுவதும் இந்த மூன்று ஆறுகளும் காய்ந்த நிலையில் இருக்கும். மானாவாரி நிலங்களாக உள்ள இப்பகுதியில் முருங்கை மாங்காய் போன்ற மரங்களை வளர்த்து விவசாயம் பார்த்து வருகின்றனர். இந்த விவசாயத்திற்கு கூட போதிய நீர் ஆதாரம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலமுறை குடகனாற்று நீரை, வானம் பார்த்த பூமியாக உள்ள அரவக்குறிச்சி பகுதிக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கடந்த ஆட்சியில் இதற்காக ஒரு ஆய்வு கமிட்டி அமைத்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். சமர்ப்பித்த அறிக்கையை இதுவரை அரசு வெளியிடவில்லை. இந்த அறிக்கையை வெளியிட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை , பெஞ்சால் புயல் மற்றும் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக அமராவதி மற்றும் குடகனாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் கரூர் - வெஞ்சமாங்கூடலூர் தரைப் பாலத்தை மூழ்கடித்து வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் வெள்ள நீரில் ஒரு பகுதியாவது விவசாயத்திற்கு பயன்பட்டிருக்கும். ஆனால்,கரைபுரண்டு ஓடும் ஆற்று நீரை விவசாயிகள் கண்ணீரோடும் கவலையோடும் பார்த்து வருகின்றனர்.
Next Story