விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மிதந்த ஆண் பிணம்

விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மிதந்த ஆண் பிணம்
X
தீயணைப்புத் துறையினர் மீட்டனர்
விருத்தாசலம் பாலக்கரை கீழ்பகுதியில் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆற்றின் ஓரம் அமைக்கப்பட்டிருந்த கழிவு நீர் கால்வாயில் ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற விருத்தாசலம் போலீசார் அந்த பிரேதத்தை மீட்க முடியாததால் தீயணைப்பு துறையினரை வரவைத்து தீயணைப்பு வீரர்கள் மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அந்த பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் விருத்தாசலம் அரச மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆற்றில் இறந்து மிதந்தவர் யார் என விசாரணை நடத்திய போது விருத்தாசலம் ஆலடி ரோட்டில் உள்ள பாரதி நகர் ராமலிங்கம் மகன் குமார் (வயது 49) என்பதும், இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஏஜென்சியில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்ததும், அவருக்கு கோமதி என்ற மனைவியும் ரத்தினம், ராஜா என்ற மகன்கள் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் காலைக்கடனை முடிப்பதற்காக அப் பகுதிக்கு குமார் சென்றபோது கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story