சங்கரன்கோவிலில் விடிய விடிய மழை : வீடுகள் இடிந்தன

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையினால் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில் உள்ளே மழை நீர் புகுந்தது. சங்கரலிங்க சுவாமி சன்னதி, சங்கரநாராயண சுவாமி சன்னதி கோமதி அம்மன் சன்னதிகளில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியது. நேற்று கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர். சங்கரன்கோவில் இந்திரா நகர், முல்லை நகர் பகுதிகளில் மழை நீர் வீடுகளில் உள்ளே புகுந்தது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பின. சங்கரன்கோவில் காயிதே மில்லத் 2ம் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (57) இவரது மனைவி பாத்திமா, மகன் பீர் மைதீன், மகள் பானு ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீடு இடிந்து விழுந்தது. இதில் ஷாஜகான் உள்ளிட்ட நான்கு பேர் உயிர் தப்பினர். இதேபோல் கா யிதே மில்லத் மூணாம் தெருவை சேர்ந்த ஷேக் அலாவுதீன் என்பவரது முன்பக்க வீட்டில் சுவர் இடிந்து விழுந்தது. சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சாமி கோவிலில் மழை நீர் கோவிலில் உள்ளே புகுந்தது. இதனால் பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர். நிட்சேப நதியில் வெள்ள நீர் ஆறாக ஓடியது.
Next Story

