குட்கா முறைகேடு வழக்கின் ஆவணங்களை பென்-டிரைவில் வழங்க எதிர்ப்பு தெரிவித்த மனுக்கள் தள்ளுபடி
Chennai King 24x7 |18 Dec 2024 5:50 AM GMT
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கின் ஆவணங்களை பென்- டிரைவ்வில் வழங்க எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் காவல் ஆணையரான ஜார்ஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி விற்பனை செய்ய உடந்தையாக செயல்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர்களான பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையராக இருந்த எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகை நகல்களை பென்- டிரைவ்வில் வழங்க எதிர்ப்பு தெரிவி்த்து குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காவல் ஆணையரான எஸ்.ஜார்ஜ், எஸ். நவநீத கிருஷ்ண பாண்டியன் உள்ளிட்டோர் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி. சஞ்சய் பாபா, வழக்கு தொடர்பான ஆவணங்களை பென்- டிரைவ்வில் மென்பொருள் வடிவில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதோ, அடிப்படை உரிமைகளை மீறுவதோ ஆகாது. வழக்கு தொடர்பான நகல்களை காகித வடிவில் மட்டுமே வழங்க வேண்டுமென குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர முடியாது. சிபிஐ தரப்பி்ல் குற்றப்பத்திரிகை நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை பென்-டிரைவ் வடிவில் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Next Story