தருமபுரம் ஆதீனத்தின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படவில்லை

செய்தியாளர்களிடம் ஆதீனம் தகவல்
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் நேற்று நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு தியாகேச பெருமானுக்கு நடைபெற்ற முசுகுந்த சகஸ்ர நாம அர்ச்சனையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது இசையமைப்பாளர் இளையராஜா தனது விவகாரத்தை பிரச்சினையாக ஆக்க வேண்டாம் என சொல்லி விட்டார். யார் எங்கு நின்று வழிபாடு நடத்த வேண்டும் என்பது ஒரு மரபாக இருக்கிறது. இரண்டு தரப்பிலும் மாற்றுக் கருத்து இருக்கிறது. மேலும் அங்கு என்ன நடந்தது என்பதை நான் பார்க்கவில்லை. நான் தற்போது அம்மன் கோவிலுக்குள் செல்லவில்லை. இங்குள்ள சிவாச்சாரியார்கள் தான் எனக்கு பிரசாதம் வழங்கினார்கள். நான் வெளியில் இருந்து வாங்கிக் கொண்டேன். அதுபோல் ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை இருக்கும். இப் பிரச்சனை தொடர்பாக அரசின் மீது வரும் விமர்சனம் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஆதீனம், இளையராஜாவிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. அரசிடம் சொல்லிவிட்டா அவர் சென்றார். அரசு எப்படி இதற்கு பொறுப்பேற்க முடியும். இளையராஜா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என இளையராஜாவே விளக்கம் கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆதீனத்தை நமஸ்கரித்து ஆசி பெற்றனர். பின்னர் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை மற்றும் திருவாய்மூர் கிராமங்களில் உள்ள ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவில்களுக்கு ஆதீனம் வருகை தந்தார். பின்னர் அங்கு நடந்த முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனையில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. அவை வாடகைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார்
Next Story