ரயில் பயணிகள் உயிரை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டருக்கு விருது!

ரயில் பயணிகள் உயிரை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டருக்கு விருது!
கடந்த 2023ம் ஆண்டு வெள்ளத்தில் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு சேவா புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2023ம் ஆண்டு வெள்ளத்தில் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு சேவா புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் ரயில்வேயில் பல்வேறு இடங்களில் பணியாற்றுகிற 100 சிறந்த பணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிற 69வது ரயில்வே வார விழாவில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த விருதுகளை வழங்க உள்ளார். கடந்த 2023 டிசம்பர் 17ந் தேதி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய பணியில் இருந்த ஜாபர் அலி ரயில் பாதை வெள்ள நீரில் மூழ்கியிருப்பதை அறிந்தார். இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு வந்தது. 800 பயணிகளுடன் வந்த ரயிலை ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக நிறுத்தினார். இந்நிலையில், எதற்காக வெகு நேரமாக ரயிலை நிறுத்தி வைத்துள்ளீர்கள் என கோபமடைந்த பயணிகள், இருள் சூழ்ந்த ரயில் நிலையத்தில் செய்வதறியாது ஸ்டேஷன் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், விடிந்ததும், ரயில் நிலையத்தின் நான்கு புறமும் வெள்ளம் சூழ்ந்திருப்பதைக் கண்ட பயணிகள் ஆபத்து குறித்து உணர்ந்து கொண்டனர். ஸ்ரீவைகுண்டத்தை புரட்டி போட்ட கடும் வெள்ளத்தால் ரயில்வே அதிகாரிகள் உட்பட மீட்பு படையினர் வருவதற்கு காலதாமதம் ஆனது. இதையடுத்து மீட்பு படையினர், 60 மணி நேரத்திற்குப் பிறகு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். இதைத் தொடர்ந்து தண்ணீர் வடியத் தொடங்கிய பிறகுதான் ரயில்வே தண்டவாள மண்மேடுகள் பல மீட்டர் தூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததை அதிகாரிகள் பார்த்தனர். இவ்வாறு 800 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக இந்திய ரயில்வே வாரிய விருதான 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' விருதுக்கு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர், ஏ.ஜாபர் அலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Next Story