சேதுபாவாசத்திரம்  ஊராட்சி ஒன்றியக் குழு நிறைவு கூட்டம், உறுப்பினர்கள்  பேச்சு 

ஒன்றியக்குழு கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுவின் நிறைவு கூட்டம்  புதன்கிழமை  ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமையில்  நடைபெற்றது.  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் கலந்து கொண்டார். கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றிய  பின்பு உறுப்பினர்கள் பேசியது, திமுக  உறுப்பினர் வழக்குரைஞர் குழ.செ.அருள்நம்பி,  கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு சிறப்பான திட்டங்களை எம்எல்ஏ ஒத்துழைப்புடன் நிறைவேற்றி உள்ளோம்  ஒன்றியக் குழு தலைவர் எனது  பகுதிகளில் நிறைவேற்றிய பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கூட்ட அரங்கில் முதலமைச்சரின் படம் இடம்பெற்றுள்ளது, துணை முதலமைச்சர் படத்தினையும்  வைக்க  வேண்டும். தீர்மானம் எண.18 இல் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்க அனுமதி கேட்டு தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடர்பாக கடந்த காலங்களில் கேள்வி எழுப்பிய போது அதற்கும் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பதிலளிக்கப்பட்ட நிலையில், ஒன்றியப் பொது நிதியை  நாம் ஏன் வழங்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.  வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன், இதுவரை அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளுக்கு நாம் நிதி வழங்கியதில்லை. தற்போது இரண்டாவது தவணை தொகையை வழங்க ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதால் வழங்கப்படுகிறது.  அதிமுக உறுப்பினர் நாடியம் மதிவாணன், கடந்த ஐந்தாண்டுகளாக ஒத்துழைப்பு வழங்கிய அலுவலர்களுக்கும் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக உறுப்பினர் மீனவராஜன்,  கடந்த ஐந்து ஆண்டுகளாக பல  திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் யாருடைய மனதும் புண்படும்படியாக நான் பேசியிருந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றார். திமுக உறுப்பினர் பாமா செந்தில்நாதன்,  கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு குடும்பம் போல் செயல்பட்டோம். என்னை தேர்ந்தெடுத்த என்  பகுதி மக்களுக்கு நன்றி  தெரிவித்துக்கொள்கிறேன்.எனது ஒன்றியக்குழு பகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த  உறுதுணையாக இருந்த  ஒன்றியக்குழு தலைவர் மற்றும் அலுவலர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது பதவிக் காலம் முடிகிறது. இனி இங்கு வந்து அமரமுடியாது  என நினைக்கும் போது உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது,. நாம் மீண்டும் போட்டியிட்டு  தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.  திமுக உறுப்பினர் சுதாகர்,  ஐந்து வருட காலத்தில் என் பகுதியில் மட்டும் சுமார் ரூ. 12  கோடிக்கும் மேல்  எம்எல்ஏ, ஒன்றியக்குழு தலைவர் ஆகியோரின் ஒத்துழைப்பினால்  பணிகளை நிறைவேற்ற முடிந்தது. அதற்காக நான் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்றார்.  ஆணையர் நாகேந்திரன், ஐந்து ஆண்டுகள் போனதே தெரியவில்லை. ஒரு குடும்பம் போல் செயல்பட்டோம். பதவியில் இல்லாவிட்டாலும் நீங்கள் எப்பொழுது  வேண்டுமானாலும் என்னை தொடர்புகொண்டு மக்கள் பிரச்சனைகளை கவனத்திற்கு கொண்டு வாருங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன். எம்எல்ஏவின் உதவியோடு விடுபட்ட பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று இன்றே துணை முதலமைச்சர் படம் கூட்ட அரங்கில் வைக்கப்படும்" என்றார். பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் பேசியது, கடந்த ஐந்து ஆண்டுகளாக மிகச் சிறப்பாக பணியாற்றி  சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு புதிய அலுவலகத்தையும் பெற்றுள்ளார்கள். கொரோனா காலத்தில்  பொறுப்பேற்றாலும் சிறப்பாக பணியாற்றி முடிந்த அளவு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து இந்த ஒன்றியம் சிறப்பான ஒன்றியமாக திகழ்கிறது.  விடுபட்ட பணிகள்  தொடர்ந்து செய்யப்படும். நீங்கள் அனைவரும் மீண்டும் ஒன்றியக்குழு உறுப்பினராக  போட்டியிட்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்றார்.  ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், "பொறுப்பேற்ற முதல் கூட்டத்தில் புதிய கட்டிடம் வேண்டுமென தீர்மானம் கொண்டு வந்து தற்போது புதிய கட்டிடத்தின் முதல் கூட்டத்தை நமது ஒன்றியக்குழுவின் நிறைவு கூட்டமாக நடத்துகிறோம். நமது எம்எல்ஏ புதிய கட்டிடம் பெற உறுதுணையாக இருந்து பெற்று தந்தார்கள்.  கொரோனா காலத்தில் பொறுப்பேற்றாலும்  முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களின் ஆதரவால்  மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்  நிறைவேற்றியுள்ளோம். அதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
Next Story