தஞ்சாவூரில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
Thanjavur King 24x7 |19 Dec 2024 1:47 AM GMT
அரசுத் திட்ட முகாம்
தஞ்சாவூரில், “உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும், மதியஉணவின் தரம் குறித்தும் ஆட்சியர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, வல்லம் தேர்வுநிலை பேருராட்சி பேருந்து நிலையத்தில் அமையப்பட்டுள்ள பாலூட்டும் அறை, நவீன கட்டண கழிப்பறைகள், இலவச கழிப்பறைகள் ஆகியவற்றின் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்தும், வல்லம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தின் செயல்பாடுகள், வல்லம் கால்நடை மருந்தகம், வல்லம் தேர்வுநிலை பேருராட்சி அலுவலக செயல்பாடுகள் குறித்தும், பேருராட்சி வளம்மீட்பு பூங்கா, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் உரம் தயாரிக்கும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் களஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் ஏராளமான பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு.பாலகணேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர்.உஷா புண்ணியமுர்த்தி, துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் கண்ணன், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சங்கர், தஞ்சாவூர் வட்டாட்சியர் அருள்ராஜ் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
Next Story