மருந்தகங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்

மருந்தகங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்
மருந்தகங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என்று திருச்சி மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநர் உமாமகேஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார்.
அரியலூர், டிச.19- அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில், மாவட்ட குடும்ப நலத்துறை, மருந்து கட்டுப்பாட்டுத் துறை சார்பில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் புதன்கிழமை நடைபெற்ற மகப்பேறு இறப்பை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தான பயிலரங்கில் அவர் மேலும் பேசியது: கருக்கலைப்புக்கான மருந்துகளின் ஓவர் திகவுண்டர்(ஓடிசி) விற்பனையில் ஏற்படும் பாதிப்புகள், அதனால் ஏற்படும் இறப்புகளையும் முறையாக கையாள வேண்டும்.  மருத்துவமனை இல்லாத மருந்தகத்தில் கருக்கலைக்கும் மருந்துகளை கொள்முதலோ, விற்பனை செய்வதோ கூடாது. மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும் மருந்தகத்தில் சரியான கொள்முதல் செய்யப்படும் மருந்துகள்,விற்பவரின் விவரங்களை மருந்து ஆய்வாளர்களிடம் சமர்பிக்க வேண்டும். மருந்தகத்தில் திடீர் அய்வுகளின் போது, முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த பயிலரங்கத்துக்கு, மருத்துவம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து தலைமை வகித்து தொடக்கி வைத்து பேசினார். துணை இயக்குநர் ராஜா, பெரம்பலூர்}அரியலூர் மாவட்டங்களுக்கான மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர் கதிரவன், கண்மணி மருத்துவமனை நிறுவனர் பொன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிலரங்கில்,மக்கள் தொடர்பு மருந்து வணிகர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :
Next Story