ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அனைத்து பொதுநல கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
Komarapalayam King 24x7 |19 Dec 2024 4:09 PM GMT
குமாரபாளையம் எடப்பாடி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அனைத்து பொதுநல கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எடப்பாடி செல்லும் சாலை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. 80 அடி அகலத்தில் உள்ள சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகள் கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தற்காலிகமாக நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகள் அமைத்து வருகின்றனர். தற்பொழுது தார் சாலை பழுதடைந்துள்ளதால் மீண்டும் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குமாரபாளையம் எடப்பாடி செல்லும் சாலை தற்போது முக்கிய சாலையாக உள்ளது. தினசரி 160 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும், நூற்றுக்கு மேற்பட்ட தனியார் நூற்பாலை வாகனங்களும், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. மிக குறுகிய சாலையாக உள்ளதால் தினசரி விபத்துக்கள் ஏற்பட்டு கை கால் முறிவும், சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிதாக சாலை அமைக்க வேண்டும் என பொதுநல கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இருப்பினும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி சாலை புதுப்பிக்கும் பணிகளை ஆரம்பித்தனர். இதனை கண்டித்து அனைத்து பொதுநல கூட்டமைப்பினர் சார்பில், இன்று காலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த சூழ்நிலையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களில் அமைதி கூட்டம் நடத்தி சுமூக தீர்வு கண்டு, பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றிய பிறகு சாலை புதுப்பிக்கப்படும் என உறுதி அளித்து சாலை மறியலை கைவிட்டு அனைத்து பொதுநல அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Next Story