விருத்தாசலத்தில் விசிக அமித்ஷா உருவ பொம்மையை எரித்து போராட்டம்
Virudhachalam King 24x7 |19 Dec 2024 5:47 PM GMT
26 பேர் கைது
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அமைச்சர் அமித்ஷா, டாக்டர் அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசியதை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமை தாங்கினார். விருத்தாசலம் நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் சுப்புஜோதி, திருஞானம், வழக்கறிஞர்கள் மதுசூதனன், தன்ராஜ், ஒன்றிய துணை செயலாளர் தென்றல், அய்யாதுரை, வயலூர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் உள்துறை அமைச்சர் அம்பேத்கர் பற்றி அமித்ஷா அவதூறாக பேசியதை கண்டித்தும், மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாலக்கரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். அப்போது திடீரென காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அமித்ஷாவின் உருவ பொம்மையை கொண்டு வந்து எரித்தனர். இதனைக் கண்ட போலீசார் கொழுந்துவிட்டு எரிந்த உருவ பொம்மையில் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தீயை அனைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்து விருத்தாசலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதும்பவத்தால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story