அரியலூர் தற்காலிக பேருந்து நிலைய கடைகளில் திருட்டு

அரியலூர் தற்காலிக பேருந்து நிலைய கடைகளில் திருட்டு
X
அரியலூர் தற்காலிக பேருந்து நிலைய கடைகளில் திருட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்..
அரியலூர், டிச.19- அரியலூர் தற்காலிக பேருந்து நிலையத்திலுள்ள 4 கடைகளின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். அண்ணாசிலை அருகே இருந்த பேருந்து நிலையக் கட்டடங்கள் பழுதடைந்ததையடுத்து, அதனை முற்றிலும் இடித்துவிட்டு தற்போது புதிய பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வருகிறது.இதையடுத்து பயணிகள் வசதிக்காக புறவழிச்சாலையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் தற்போது அண்ணாசிலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், அந்த தற்காலிக பேருந்து நிலையத்தில், பயணிகளை நம்பி திறக்கப்பட்ட 20 கடைகளில், சரிவர வியாபாரம் இல்லாததால், நஷ்டமடைந்த கடை உரிமையாளர்களின் சிலர் தங்களது கடைகளை முற்றிலும் மூடிவிட்டனர். இருப்பினும் நஷ்டமடைந்தாலும் 6 கடைகள் மட்டுமே இயங்கி வந்தன.இந்நிலையில், கடை உரிமையாளர்களான முத்தமிழ்ச்செல்வன், பெரியசாமி, சரவணன், காளையன் ஆகியோர் வியாழக்கிழமை காலை   தங்களது கடைகளை திறக்க வந்த போது, கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் உள்ளேச் சென்று பார்த்த போது, கடையினுள் இருந்த பீடி, சிகரெட், ரொட்டி, இனிப்பு, கார வகைகள், குளிர்பானங்கள், சில்லரை காசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மேற்கண்ட கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் அரியலூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story