வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
X
சிங்கம்புணரி பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சியுடன் சிவபுரிபட்டி ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் நேற்று(டிச.19) வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவபுரிபட்டி ஊராட்சியை சிங்கம்புணரி பேரூராட்சியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவலறிந்த அந்தக் கிராம மக்கள் சிங்கம்புணரி வட்டாட்சியா் அலுவலகம் முன் தரையில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிறகு அவா்கள், சிங்கம்புணரி தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மாரீஸ்வரனிடம் மனுக்களை அளித்தனா். இதில், சிவபுரிபட்டி, இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 2,000 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்களுக்கு விவசாய வேலை போக எஞ்சிய நாள்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள்கள் கிடைக்கும் வேலையை நம்பி வாழ்கிறோம். எனவே, சிவபுரிபட்டியை சிங்கம்புணரி பேரூராட்சியுடன் இணைக்கக் கூடாது என அதில் குறிப்பிட்டனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் அளிப்பதாக துணை வட்டாட்சியா் தெரிவித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.
Next Story