அமித் ஷா பேச்சுக்கு கண்டனம்: சென்னையில் வன்னியரசு தலைமையில் விசிகவினர் ரயில் மறியல்
Chennai King 24x7 |20 Dec 2024 7:36 AM GMT
சட்டமேதை அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சென்னயில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, அம்பேத்கர் குறித்து பேசுவது ஃபேஷனாகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் புண்ணியமாவது கிடைக்கும். அம்பேத்கர் பெயரை மேலும் 100 முறை உச்சரிக்கட்டும். ஆனால் அவர் கருத்து குறித்தும் அவர்கள் பேச வேண்டும் என்று கூறியிருந்தார். இப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இண்டியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் பகுதியாக சென்னை, சைதாப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தலைமையில், மாவட்டச் செயலாளர் ஜேக்கப் ஒருங்கிணைப்பில் தண்டவாளம் வழியாக நுழைந்த 50-க்கும் மேற்பட்டோர் கடற்கரை நோக்கி செல்லும் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போலீஸார் அவர்களை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். தொடர்ந்து, நடைமேடையில் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு சென்று நிலையத்தை விட்டு விசிகவினர் வெளியேறினர். இதனால் தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் தடத்தில் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் வன்னியரசு கூறியதாவது, முழுக்க முழுக்க திரிபுவாத அரசியலை பாஜக முன்னெடுக்கிறது. பிறக்கும்போது இந்துவாக பிறந்த நான் இந்துவாக சாக மாட்டேன் என கூறியவர் அம்பேத்கர். அவரை இந்துத்துவா அம்பேத்கராக மாற்ற பாஜகவினர் முயற்சி செய்கின்றனர். அம்பேத்கரின் கொள்கைகளுக்கு எதிராக ஒரே நாடு, ஒரே தேர்தல், குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் போன்றவற்றை கொண்டு வந்துள்ளனர். அம்பேத்கர் கொடுத்த அனைத்து பன்முகத் தன்மையையும் காலி செய்துவிட்டு, ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்து ராஷ்டிரத்தை செயல்படுத்த துடித்துக் கொண்டிருக்கின்றனர். அதை திசை திருப்பும் வகையில் அம்பேத்கரை இழிவுபடுத்தி மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இதை வன்மையாக கண்டிப்பதுடன் அவர் மன்னிப்பு கேட்டு, பதவி விலகவும் வலியுறுத்துகிறோம். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அகிம்சை வழியில் போராடினர். அங்கு பாஜக சார்பில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மட்டுமே உள்ளனர். அப்படிப்பட்டவர்களால் தான் வன்முறையை செய்ய முடியும். அவர்கள் திரிபுவாதம் செய்கின்றனர். நேர்மையாக இப்பிரச்சினையை அணுக வேண்டும். நாடாளுமன்ற நடவடிக்கைகள் அவர்களது தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பப்படுகிறது. நேரடி ஒளிபரப்பில் அவர் என்ன சொன்னாரோ அதைத்தான் சொல்கிறோம். அம்பேத்கரை கடவுளோடு ஒப்பிட்டு பேசுவது அவரை அவமதிப்பதாகும் என அவர் தெரிவித்தார்.
Next Story