வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வணிக தூதுவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

X
அரியலூர், டிச.20- அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும், இரண்டு வணிக தூதுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் கிராமத்தில் விளையும் வேளாண் அருகில் உள்ள ஒழுங்கு முறை கூடங்களுக்கு விற்பனை விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமானூர் வட்டார வணிக தூதுவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கீழப்பழுரில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் வேளாண் வணிகம் கோவிந்தராசு, கலந்து கொண்டு வேளாண் உட்கட்டமைப்பு நிதி, தமிழ்நாடு சிறு தானிய இயக்கம் மற்றும் மின்னனு தேசிய வேளாண் சந்தை பயன்கள் குறித்து விளக்கி கூறினார். வேளாண் அலுவலர் கார்த்திக் மக்காச்சோளம், நிலக்கடலை சந்தை படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விளக்கி பேசினார். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள உலர்களங்கள். பொருளீட்டு கடன். குளிர்பதன கிடங்கு, உழவர் நலத்திட்டம் ஆகியவற்றை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஒழுங்கு முறை விற்பனை கூட அலுவலர் குழந்தைவேலன் கூறினார். இக்கூட்டத்தில் திருமானூர் மற்றும் அரியலூர் வட்டாரத்தை சேர்ந்த 32 வணிக தூதுவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) அருந்ததி செய்திருந்தார்.
Next Story

