மதுராந்தகம் ராமர் கோவில் தேரை பாதுகாக்க பக்தர்கள் கோரிக்கை
Chengalpattu King 24x7 |20 Dec 2024 10:26 AM GMT
மதுராந்தகம் ராமர் கோவில் தேரை பாதுகாக்க பக்தர்கள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்தில், புகழ்பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான, ஏரி காத்த ராமர் என அழைக்கப்படும், கோதண்டராமர் திருக்கோவில் உள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், இக்கோவில் செயல்பட்டு வருகிறது. இத்திருத்தலத்தில் மூலவர் சன்னிதியில் ராமர், சீதையை கைப்பற்றியவாறு, திருமணக் கோலத்தில் உள்ளார். இதை, வேறெங்கும் காண முடியாது. இத்திருக்கோவிலில் தேர்த் திருவிழா, மிக விமரிசையாக நடைபெற்று வந்தது. இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்த, கடந்தாண்டு பாலாலயம் செய்யப்பட்டு, கண்ணாடி அறைக்குள் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. உபயதாரர்கள் நிதியின் வாயிலாக, தேரின் விஸ்தார மேல்மட்ட கொடுங்கை, 75 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கும் பணி நடந்தது. தேரின் அடிபீடம் 15 அடி மற்றும் விஸ்தார மேல்மட்ட கொடுங்கையுடன் சேர்த்து, 52 அடியில் மரத்தால் தேர் வடிவமைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மேல்மட்ட கொடுங்கை அமைக்கும் பணிக்காக தேரின் அடி பீடத்தைச் சுற்றி மண் துாசு மற்றும் வெயில், மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில், பச்சை நிற துணியால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டது. அந்த துணிகள் கிழிந்து வீணாகின. இதனால், தேரின் அடி பாகத்தில், சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடு கொண்ட மரச்சிற்பங்கள், மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. மேலும், திறந்தவெளியில் தேர் உள்ளது. எனவே, தேரைச் சுற்றி தென்னங்கீற்றால் கொட்டகை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தேரின் மேல்மட்ட கொடுங்கை மழையில் நனையாதபடி, பாலித்தீன் தார்ப்பாய்கள் கொண்டு, முழுதுமாக மூடப்பட்டது.தற்போது, 'பெஞ்சல்' புயல் காரணமாக, பாலித்தீன் தார்ப்பாய்கள் கிழிந்து சேதமாகி உள்ளன. இதனால், தேரில் உள்ள சிறிய மரச்சிற்பங்கள் நனைந்து வீணாகி வருகின்றன. எனவே, மீண்டும் புதிதாக பாலித்தீன் தார்ப்பாய்கள் கொண்டு தேரை மூடி பாதுகாக்க, துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story