அரியலூர் மாவட்டத்தில் ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்பு குழுக்கூட்டம் மற்றும் உதயம் பதிவு குறித்த விழிப்புணர்வு கூட்டம்.

X
அரியலூர், டிச.21- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்பு குழுக்கூட்டம் மற்றும் உதயம் பதிவு குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .பொ.இரத்தினசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் விளையும் பொருட்களான முந்திரி, முருங்கை, ஆய்த்த ஆடைகள், சிறுதானியங்கள் ஆகிய மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்வது தொடர்பான விபரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்றுமதிக்கு தேவையான பல்வேறு தகவல்களை மற்றும் அனுபவங்களை பல்வேறு நிறுவனத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பகிர்ந்து கொண்டனர்.மேலும், ஏற்றுமதி விழிப்புணர்வு கருத்தரங்குடன் அரியலூர் மாவட்டத்தில் பொருளாதார முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசெல்லும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிறந்த உற்பத்தி நிறுவனங்களைக் கண்டறிவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட தொழில் மையம் மூலம் மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்பட்டது. அதனை தெடார்ந்து தொழில்நிறுவனத்தின் உரிமையாளர் அனைவரும் உத்யம் பதிவினை குறித்தகாலத்தில் மேற்கொண்டு தொழில் நிறுவனத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள், உதவிகளை பெறவும், அவை செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் பயன்பெறவும் உத்யம் பதிவுச்சான்றிதழ் அடையாள அட்டையாகிறது. அரசு கொள்முதலில் பங்கு பெறவும், நிலுவைத்தொகைகளை உரிய காலக்கெடுவுக்குள் வழங்காமை குறித்த வழக்குகளை பதிவுசெய்யவும், விற்பனை தொகை உரிய காலத்தில் கிடைப்பதை உறுதி செய்வதான TReDS தளத்தில் பதிவு செய்யவும் உத்யம் பதிவுச் சான்றிதழ் அவசியமாகின்றது. இந்திய ரிசர்வ் வங்கி விதிகளின்படி, முன்னுரிமைக் கடன் முறையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயந்திர தளவாட முதலீட்டுக்கான பருவக்கடன் பெறவும் நடைமுறை மூலதனத்துக்கான கடன் பெறவும் உத்யம் பதிவு ஒரு துருப்புச்சீட்டாக அமைகிறது. அங்கீகரிக்கப்படாத, அமைப்பாக வரையறுக்கப்படாத குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைப்பாக ஒழுங்குப்படுத்தப்படவும் அரசின் அங்கீகாரம் மற்றும் அரசு வழங்கும் சலுகைகள், மானியங்கள், நிதி மற்றும் நிதி சாராத உதவிகள் பெறவும் உத்யம் பதிவுச் சான்றிதழ் மிக அவசியமாகிறது. இதுவரை உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறாத குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் www.udyamregistration.gov.in என்ற இணையதளம் வாயிலாக உத்யம் பதிவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டது.பின்னர், அரியலூர் மாவட்டத்தில் தொழில் நிறுவன உரிமம் பெற ஒற்றை சாளர இணையதளத்தில் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கும் விரிவுப்படுத்துவதற்கும், பல்வகை உரிமங்கள் கோரும் விண்ணப்பங்களைப் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு WWW.TNSWP.COM என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளம் மூலம் முதலீட்டாளர்கள் தொழில் வணிக நடவடிக்கைகளுக்காக சட்டப்படியாக பெற வேண்டிய அனைத்து ஒப்புதல்கள், உரிமங்கள், அனுமதிகள் தடையில்லாச் சான்றிதழ்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட கால வரையறைக்குள் வெளிப்படையான மற்றும் சுலபமான முறையில் மின்னணு மூலம் பெற்றுக்கொள்ள உதவும்.மேலும் இந்த இணையதளம் அரசுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையிலான தொடர்பினை நேர்முகம் தேவைப்படாததாகவும் காகிதமற்ற மின்னணு முறையினதாகவும் மாற்றியுள்ளது. இதன் மூலம் 40-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள், அரசு சார்ந்த நிறுவனங்கள் வழங்கும் 200-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. சேவை வேண்டுவோர் தமது விண்ணப்பங்களை அவற்றுடன் இணைக்கத்தக்க ஆவணங்களுடன் இணைய வழியாகப் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பம் இணைய வழியாக பெறப்பட்டவுடன் உரிய அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு கூடுதல் ஆவணங்கள் மற்றும் விளக்கம் தேவைப்படின் அதிகபட்சம் 7 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும். 7 நாட்களுக்கு மேற்படின் விண்ணப்பம் முழுவடிவில் பெறப்பட்டதென எடுத்துக்கொள்ளப்பட்டு குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பம் குறித்த முடிவு எடுக்கப்படும். எனவே தொழில் முதலீட்டாளர்களுக்கு பெரும்பயனளிக்கும் இந்த இணையதளத்தை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் லட்சுமி இணையதளம் வாயிலாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் சார்பாக திவ்யா, முன்னோடி வங்கி மேலாளர், கிளை மேலாளர் சிட்கோ, துணை இயக்குநர் தோட்டக்கலைதுறை, துணை இயக்குநர் வேளாண்மை வர்த்தகம், உதவி இயக்குநர் கைத்தறி, முதல்வர் ஐ.டி.ஐ, கனரா வங்கி மேலாளர், தொழில் நிறுவன உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்களின் சங்க பிரதிநிதிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். .
Next Story

