தஞ்சாவூரில் கருப்பூர் கலம்காரி ஓவிய செய்முறைப் பயிற்சி
Thanjavur King 24x7 |21 Dec 2024 1:38 PM GMT
பயிற்சி
தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் புவிசார் குறியீடு பெறப்பட்ட கருப்பூர் கலம்காரி ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் மாதம்தோறும் அளிக்கப்படும் பாரம்பரிய கைவினைப் பொருள் செயல் விளக்கப் பயிற்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற இப்பயிற்சியை சரஸ்வதி மஹால் நூலகத்தின் முன்னாள் காப்பாளர் முனைவர் பெருமாள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கருப்பூர் கலம்காரி ஓவியப் பயிற்சியை திருப்பனந்தாள் அருகே சிக்கல்நாயக்கன் பேட்டையைச் சேர்ந்த கருப்பூர் கலம்காரி ஓவியர் ராஜமோகன் எம்பெருமாள் வழங்கினார். மேலும், இந்த ஓவியத்தின் சிறப்புகளையும் விளக்கினார். இதில், தஞ்சாவூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், திருநங்கைகள் உள்பட 60க்கும் அதிகமானோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் எஸ். முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story