ஜாபர் சாதிக் அவரது சகோதரர் ஜாமீன் வழக்கு விசாரணை: ஐகோர்ட் நீதிபதி விலகல்
Chennai King 24x7 |21 Dec 2024 2:27 PM GMT
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 26 தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் தாக்கல் செய்த மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து, ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அமலாக்க துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 19-ம் தேதி மாலை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதற்கு முன்பாகவே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனையடுத்து, மனு நிலுவையில் இருந்தபோது எப்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டது? என கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
Next Story