கோவை: கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் திடீர் போராட்டம்
Coimbatore King 24x7 |22 Dec 2024 1:24 AM GMT
பொது இடங்களில் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி போராட்டம்
கணியூர் ஊராட்சி பெரிய தோட்டம் பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போதிலும், தொடர்ந்து சிலர் தடையை ஏற்படுத்தி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், சிலர் நியாய விலை கடை வீதி, பேருந்து நிறுத்தம் மற்றும் பெருமாள் கோயில் வீதிகளில் சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியிருந்தனர். இதனால் சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதையடுத்து,வருவாய்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் தகரங்களை வைத்து தடுப்புகள் அமைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.இதனால் பொதுமக்கள் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சூலூர் வட்டாட்சியர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை.உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
Next Story