சேலம் இரும்பாலை அருகில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

சேலம் இரும்பாலை அருகில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் இரும்பாலை அருகே உள்ள மாரமங்கலத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 53). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதி சென்றார். நேற்று மதியம் அருகில் இருந்தவர்கள் பார்க்கும் போது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு கிடப்பது தெரிந்தது. இது குறித்து அவர்கள் திருப்பதியில் உள்ள பாஸ்கருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையர்கள் சுவர் ஏறி குதித்து வராண்டாவில் இருந்த மின் இணைப்பை துண்டித்து உள்ளனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து திருப்பதியில் உள்ள பாஸ்கரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது வீட்டில் 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் வைத்திருந்தாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story