செல்போனில் ‘கேம்' விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

செல்போனில் ‘கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
போலீசார் விசாரணை
சேலம் வீராணம் அருகே உள்ள எம்.பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மெய்வேல், கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சுந்தரேசன் (வயது 18). இவர் டிப்ளமோ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தந்தை மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் சுந்தரேசன் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள தனது அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சுந்தரேசனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். செல்போனில் ‘கேம்’ வாலிபர் தற்கொலை குறித்து தகவல் கிடைத்தும் வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், சுந்தரேசன் கட்டிட வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை சரியாக பெற்றோரிடம் கொடுப்பதில்லை. மேலும் அவர் எப்போதும் செல்போனில் பப்ஜி உள்ளிட்ட ‘கேம்' விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்ததுடன் செல்போனையும் பிடுங்கி கொண்டனர். இதனால் மனவேதனை அடைந்த சுந்தரேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story