மின் வழித்தடத்தை அகற்றாததால் உத்திரமேரூரில் வீடுகட்டும் பணி
Thiruporur King 24x7 |22 Dec 2024 6:07 AM GMT
மின் வழித்தடத்தை அகற்றாததால் பாதியில் நிற்கும் வீடு கட்டும் பணி ஓராண்டாக அதிகாரிகள் அலட்சியம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மருதம் கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்கள், பல ஆண்டுகளாக குளக்கரை பகுதி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள், அரசு இலவச வீட்டுமனை மற்றும் தொகுப்பு வீடு கட்டித்தர நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், அதே கிராமத்தில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு, 2023 --- 24ம் நிதியாண்டில், 'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின்' திட்டத்தில், 36 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 15 வீடுகள் கட்டும் பணி கடந்தாண்டு துவக்கப்பட்டது. தற்போது, வீடுகள் கட்டும் பணி அரைகுறையாக விடப்பட்டுள்ளது. இதற்கு காரணம், வீடுகள் கட்டும் இடத்தின் மேலே மின் வழித்தடம் செல்கிறது. மின் வழித்தடத்தை அகற்ற, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தனமாக இருந்து வருகின்றனர். தற்போது, மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், குளக்கரையில் வசித்து வரும் பயனாளிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து, பயனாளிகள் அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மின் வழித்தடத்தை அகற்றி, வீடுகள் கட்டும் பணியை துவக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story