நாகை புதிய பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதை
Nagapattinam King 24x7 |22 Dec 2024 7:44 AM GMT
கண்டித்து அறவழி உண்ணாவிரத போராட்டம்
நாகை புதிய பேருந்து நிலையத்தை, செல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மாற்றக்கூடாது. பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள அவுரித்திடலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாகை புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள, மாவட்ட அரசு மருத்துவமனையை ஏற்கனவே செயல்பட்டது போல, அனைத்து விதமான மருத்துவ சேவைகளுடன், அனைத்து விதமான மருத்துவர்களையும் உடனடியாக நியமனம் செய்ய வலியுறுத்தியும், சிடி ஸ்கேன் இயந்திரம் உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், நாகை மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகத்திற்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான புஞ்சை நிலத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வலியுறுத்தியும், நாகை மாவட்ட வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், நாகை மக்கள் அதிகாரம், நாகப்பட்டினம்- திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில், நாகை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு எதிரில் நேற்று அறவழி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, நாகை மாவட்ட வளர்ச்சி குழு மாவட்ட தலைவர் எல்பி பாஸ்கரன் தலைமை வகித்தார். போராட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே.நிஜாமுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் புதிய பேருந்து நிலையத்தில் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு வியாபாரிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தனர்.
Next Story