அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு
Chennai King 24x7 |22 Dec 2024 9:29 AM GMT
நெல்லை நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நெல்லை நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்ற இளைஞரை நீதிமன்ற வாயிலில் வைத்து 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிப்படுகொலை செய்தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றநீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் சீலிட்ட அறிக்கையை தாக்கல் செய்தனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது: போலீஸார் சிறப்பு உதவி ஆய்வாளரான உய்யகாட்டான் என்பவர் துணிச்சலாக கொலையாளிகளில் ஒருவரை வழக்கறிஞர்களின் துணையுடன் விரட்டிச் சென்று பிடித்துள்ளார். அவரை பாராட்டுகிறோம். அவருக்கு உரிய வெகுமதி மற்றும் நற்சான்றிதழை அரசு வழங்குவதுடன் அவருடைய பணிப்பதிவேட்டிலும் பதிவு செய்ய வேண்டும். அதேநேரம் மற்ற போலீஸாரும், அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருந்தனர்? இந்த கொலை சம்பவம் எங்கு நடந்துள்ளது என்பது தான் கவலை கொள்ள வைக்கிறது. நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே ஒருவரை விரட்டிகொலை செய்ய முடிகிறது என்றால் சாட்சிகள் எப்படி துணிச்சலாக சாட்சியம் அளிக்க முன்வருவர். காவல்துறையினர் பணி நேரத்திலும்கூட செல்போனில் தான் அதிகமாக மூழ்கி கிடக்கின்றனர். நாங்கள் நீதிமன்றத்துக்கு வரும் வழியில் போக்குவரத்து போலீஸார் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை கண்கூட்டாக பார்க்கிறோம். இந்த கொலை சம்பவம் நடந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்து தவறிழைத்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் மீது நெல்லை காவல் ஆணையர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தரமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் வரை இடைக்காலமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் தேவையான ஆயுதம் தாங்கிய போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜன.7-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
Next Story