நெல்லை சம்பவம் எதிரொலி: அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - தமிழக டிஜிபி உத்தரவு
Chennai King 24x7 |22 Dec 2024 3:15 PM GMT
திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக தமிழகத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் அருகே மாயாண்டி என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலானது. இக்கொலை தொடர்பாக தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். அதோடு மட்டும் அல்லாமல் போலீஸ் தரப்புக்கு பல கேள்விகளை எழுப்பி, சம்பவம் குறித்தும், நீதிமன்றங்களில் உள்ள பாதுகாப்பு பணிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், பணியில் இருக்கும் போலீஸார் பலர் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். போனில் ஏதாவது ஒரு காட்சியைப் பார்த்து அதில் மூழ்கி இருந்தால் எப்படி பாதுகாப்பு பணி நடைபெறும் என கேள்வி எழுப்பினர். அதோடு, போலீஸார் செல்போன் பயன்படுத்துவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினர். அதோடு மட்டும் அல்லாமல், நீதிமன்றங்களில் நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடு செய்யும்வரை இடைக்காலமாக மாவட்ட நீதிமன்றங்களில், முக்கியமான இடங்களில், தேவையான எண்ணிக்கையில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வகை நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, துப்பாக்கி ஏந்திய போலீஸாரை பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் நீதிமன்ற வளாகங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கு விசாரணைக்கு தொடர்பில்லாத நபர்கள் யாராவது நடமாடுகிறார்களா? என்பதை உன்னிப்பாக கண்காணிக்கவும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் பிடிபட்டால் அவர்களிடம் உடனடியாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால் கூறுகையில், அதிகளவில் கூட்டம் வரும் நீதிமன்றங்களில் ஏற்கனவே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக எஸ்.ஐ ரேங்கில் உள்ள ஒருவர் உட்பட இருவர் நவீன துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Next Story