சமுசிகாபுரத்தில் நெசவாளர்கள் முன்னேற்றத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தில் நெசவாளர்கள் முன்னேற்றத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான தனியரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான நெசவாளர்கள் முன்னிலையில் தனியரசு பேசும்போது, அனைத்து தரப்பினருக்கும் தங்களின் உரிமையை கேட்டு பெற சங்கம் இருப்பது போல், நெசவாளர்களுக்கும் தனி சங்கம் மற்றும் அரசியல் கட்சி தேவை. அதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியின் நிறைவில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பல ஆண்டுகளாக நெசவாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள கூலி உயர்வை அரசு உடனடியாக வழங்க வேண்டும். 60 வயது கடந்த மூத்த நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து நெசவாளர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு புறக்கணித்தால் நெசவாளர்களை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் அல்லது பட்டினி போராட்டம் நடத்தப்படும். விவசாயத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமையை ஜவுளி தொழிலுக்கும் அரசு வழங்கி பஞ்சாலைகளையும் நூற்பாலைகளையும் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. நீதிமன்றத்திற்கு வருபவர் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொழில் வளர்ச்சியை பாதிக்கும். மக்களின் ஒற்றுமையில் சிதைவு ஏற்படும். தென் தமிழகத்தில் கொலை அல்லது ஜாதி மத மோதல்கள் நடக்காமல் தடுக்க இரும்பு கரம் உண்டு அரசும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மக்கள் கிளர்ச்சியூட்டு எழுந்து போராட வேண்டிய நிலை வரும். நெசவாளர்கள் கோரிக்கை வரி உயர்வு மீனவர்கள் பிரச்சனை இவற்றையெல்லாம் நேர் செய்து ஒழுங்கு படுத்தினால் வரும் தேர்தலில் முதல்வர் கூறியது போல் 200 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றாத பட்சத்தில் முதல்வரின் விருப்பம் கனவாகிவிடும். எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக முதல்வர் அரசு இயந்திரத்தை செலுத்த வேண்டும். விமான நிலையங்கள் தொடர்வண்டி நிலையங்கள் வட மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பல்வேறு போதைப் பொருட்கள் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சாதாரணமாக நடமாடுகிறது. இந்தியாவில் உள்ள மூன்று மதங்களும் வலியுறுத்தக்கூடிய அன்பு ஒழுக்கம் ஈவு இரக்கம் போன்றவற்றில் இருந்து இந்திய மக்கள் இளைஞர்கள் விலகி கடுமையான போதை பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து வரும் கொலைகள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளுக்கு போதை பழக்கம் மூல காரணமாக உள்ளது. போதையில் மதி இழந்து செய்யும் கொலைகள் காரணமாக குற்றவாளிகளின் வாழ்க்கையும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. போதை வஸ்துகளின் நடமாட்டத்தை கூர்மையாக கண்காணித்து அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story



