ராமநாதபுரம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சிகளை, ராமேஸ்வரம் நகராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் முற்றுகை இட்டனர்
ராமேஸ்வரம் தீவு பகுதியில் தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் கிராமங்கள் தனி தனி ஊராட்சி மன்றங்களாகவும், ராமேஸ்வரம் பகுதி தனி நகராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது. தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊராட்சிகளில் பெரும்பான்மையாக மீனவர்கள் வசித்து வருகிறார்கள். மீன்பிடித் தொழிலும், மல்லிகைப்பூ விவசாயம் இங்கு முக்கிய தொழில் ஆக உள்ளது. இங்கு எந்த நவீன தொழிற்சாலைகளும் இல்லை. இங்கு 20க்கும் மேற்பட்ட சிறிய மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு வாழும் மக்கள் குறைந்த வருவாயில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பான்மையாக இங்கு குடிசை வீடுகள் மட்டுமே காணப்படுகிறது.இந்த நிலையில் தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊராட்சியை ராமேஸ்வரம் நகராட்சியோடு இணைக்கும் முயற்சியில் சில ஆளும்கட்சி நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனடிப்படையில் தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊராட்சியை ராமேஸ்வரம் நகராட்சியோடு இணைக்க கோரி தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றி அதை அமைச்சர் துரைமுருகன் அவர்களிடம் ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் நாசர் கான் நேரில் சென்று கொடுத்து வந்தார். இதன் அடிப்படையில் ராமேஸ்வரம் நகராட்சியோடு தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊராட்சி இணைப்பதற்கான கருத்துரு மாவட்ட ஆட்சியர் வசம் உள்ளது. இந்நிலையில் தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் கிராம மக்கள் ஒன்று திரண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனையடுத்து தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊர் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சிகளை ராமேஸ்வரம் நகராட்சியோடு சேர்ப்பதற்கு தனி தனி ஆட்சேபனை கடிதம் ஒப்படைக்கப்பட்டது. ஊராட்சியாக இருக்கும் பட்சத்தில் மத்திய மாநில அரசின் நலத்திட்டங்கள் அதிக அளவில் நேரடியாக மக்களை சென்றடைய வாய்ப்புள்ளது.மத்திய அரசின் சிறப்பு நிதிகள் ஊராட்சிக்கு கிடைக்கும். குறைந்த வரி ஊராட்சியில் விதிக்கப்படும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகிறார்கள். பல்வேறு அரசு திட்டங்கள் ஊராட்சி மக்களுக்கு கிடைக்கும். ஆனால் நகராட்சியில் கிடைக்க வாய்ப்பில்லை. மக்களுக்குப் பணியாற்றும் நபர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் வசதி ஊராட்சியில் உள்ளது. அதேசமயம் நகராட்சி நிர்வாகம் ஆக்கப்படும் அதிகமான வரிகள் விதிக்கப்படும், ஊராட்சியில் கிடைக்கும் மத்திய மாநில சிறப்பு திட்டங்கள் கிடைக்காமல் போகும், வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் பன் மடங்கு வரி உயர்த்தப்படும். எனவே எங்களுக்கு இந்த ஊராட்சி வாழ்க்கையே போதும், நகராட்சியோ பேரூராட்சியோ எங்களுக்கு வேண்டாம் என தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர் இதில் பாம்பன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேட்ரிக் மற்றும் தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் சேனாதிபதி சின்னத்தம்பி ஆகியோர் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் கிராம மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Next Story