திருவண்ணாமலை மகா தீபம் இன்றுடன் நிறைவு.

திருவண்ணாமலை மகா தீபம் இன்றுடன் நிறைவு.
கொப்பரை நாளை கொண்டுவரப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. பிடாரி அம்மன், விநாயகர் உற்சவங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடை பெற்றது. பின்னர், மூலவர் சன்னிதி முன்பு தங்கக் கொடி மரத்தில் கடந்த 4-ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது. 13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டன. ஜோதிப்பிழம்பாக அருணாசலேஸ்வரர் காட்சி கொடுத்ததால், கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலையாரைக் குளிர்விக்கும் வகையில், ஐயங்குளத்தில் 3 நாள் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதற்கிடையில், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிலையில் அண்ணாமலை உச்சியில் மகா தீபத்தை 11 நாட்கள் பக்தர்கள் தரிசிப்பது வழக்கம். அதன்படி, மகா தீபம் இன்று மாலை 11-வது நாளாக ஏற்றப்பட உள்ளன. இதையடுத்து மகா தீப மலையிலிருந்து, தீபக் கொப்பரை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நாளை கொண்டு வரப்பட உள்ளது. பின்னர், அதிலிருந்து சேகரிக்கப்படும் கரு மையுடன், வாசனைத் திரவியம் சேர்க்கப்பட்டு, ஆரூத்ரா தரிசனத்தின்போது, ஸ்ரீ நடராஜருக்கு சாத்தப்படும். பிறகு, பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வழங்கப்பட உள்ளன.
Next Story