குமரி : மணல் ஆலையை விரிவுபடுத்த விட மாட்டோம் - எம் பி பேட்டி
Nagercoil King 24x7 |24 Dec 2024 3:30 AM GMT
நாகர்கோவில்
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று நாகர்கோவிலில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்:- " கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் முதல் தற்போது வரை அதானி குழுமத்தின் மோசடி குறித்து விவாதிக்க அனுமதி வழங்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அரசியல் அமைப்புச் சட்டத்தின் 75 வது ஆண்டு விழா குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து கிண்டலாக பேசினார். எனவே அம்பேத்காரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும். அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய அரிய மணல் ஆலையை விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடலோர மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்திய அரிய மணல் ஆலையை விரிவுபடுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே மக்களின் விருப்பத்திற்கு மாறாக அந்த ஆலையை விரிவு படுத்த விட மாட்டோம். இதற்கு அனுமதி அளிக்க கூடாது என பாராளுமன்றத்திலும் வலியுறுத்துவோம் என்று கூறினார்.
Next Story