விருத்தாசலம் அருகே வெள்ளாற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு குழுவினருடன் அமைச்சர் சி வெ கணேசன் ஆலோசனை

விருத்தாசலம் அருகே வெள்ளாற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு குழுவினருடன் அமைச்சர் சி வெ கணேசன் ஆலோசனை
மூன்றாவது நாளாக தேடும் பணி தீவிரம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மோசட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (40), விவசாயி. மனைவி சரஸ்வதி. கடந்த 22 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சரஸ்வதி அவரது மகன்கள் சந்துரு (10), சித்தார்த் (6), ஆகிய இருவருடன் குளிக்க சென்றார். அப்போது சந்துருவும் சித்தார்த்தும் ஓடி சென்று ஆற்றில் இறங்கினர். ஆற்றில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருந்ததாலும் ஆழம் அதிகமாக இருந்ததாலும் சந்துரு, சித்தார்த் இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் சரஸ்வதி ஓடிச் சென்று ஆற்றில் இறங்கி சித்தார்த்தை மீட்டார். அதற்குள் தாயின் கண் முன்னே சந்துரு தண்ணீரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டான். தன் மகன் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை கண்டு தாய் கதறி அழ அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆற்றில் இறங்கி தேடினர். தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாரும் சந்துருவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் சந்துருவை கண்டுபிடிக்க முடியாததால் நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக படகு வைத்து தீனைப்புத் துறையினர் வெள்ளாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவனை தேடி வந்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலையிலிருந்து மூன்றாவது நாளாக 2 ரப்பர் படகுகளில் சந்துருவை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட மீட்புக் குழு 40 பேர் மோசட்டை, டி.வி.புத்தூர், கருவேப்பிலங்குறிச்சி, கொளத்தங்குறிச்சி உள்ளிட்ட கிராம பகுதியில் உள்ள வெள்ளாற்றின் ஆற்றுப்படுகையில் தேடி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அறிந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் வெள்ளாற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணியை நேரில் ஆய்வு மேற்கொண்டு மீட்பு குழுவிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து சிறுவனின் பெற்றோர்கள் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு சலித்தார் போல் தேடி சந்துருவை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என மீட்புக் குழுவுக்கு உத்தரவிட்டார். சிறுவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மூன்று நாட்களாக கிடைக்காததால் சிறுவனின் பெற்றோர்கள் உறவினர்கள் ஆற்றங்கரையிலேயே இரவு பகல் பாராமல் காத்து கிடப்பதால் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Next Story