சொன்னதை செய்த எங்கள் மாவட்ட ஆட்சியர் விடுதி மாணவர்கள் நன்றியுடன் புகழாரம்.
Namakkal (Off) King 24x7 |24 Dec 2024 1:13 PM GMT
விடுதி ஆய்வின் போது மாணவர்கள் வைத்த கோரிக்கையினை ஏற்று மாவட்ட ஆட்சியர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் 18.12.2024 அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இராசிபுரம் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரிடம் விடுதி மாணவர்கள் விளையாட்டு உபகரணங்கள் வேண்டுமென கோரிக்கை வைத்தனர். மாணவ செல்வங்கள் கல்வியோடு நல்ல உடல்நலனையும் பேண வேண்டுமென்ற அடிப்படையில் உடனடியாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என மாணவர்களிடம் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து, மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இன்றைய தினம் சதுரங்கம், கைப்பந்து, கிரிக்கெட், இறகு பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் விடுதி மாணவர்களுக்கு வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாணவ செல்வங்கள் எவ்வித கவன சிதறலுக்கும் ஆளாகாமல் விளையாட்டிலும், கல்வியிலும் கவனம் செலுத்திட வேண்டும். பள்ளி வகுப்பறைகளில் கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல், கல்வியோடு விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டிலும் நாம் பாடம் கற்று கொள்ள முடியும். நாம் அனைவரும் விளையாட்டு துறையில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். கல்வியோடு தங்களது தனித்திறமையையும் வளர்த்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன் முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் எஸ்.கோகிலா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story