மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு செய்ய பேராசிரியர்கள் விவரங்களை அனுப்ப அவகாசம் நீட்டிப்பு

மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு செய்ய பேராசிரியர்கள் விவரங்களை அனுப்ப அவகாசம் நீட்டிப்பு
மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு செய்ய பேராசிரியர்கள் விவரங்களை அனுப்ப அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்ட செய்திக் குறிப்பில், மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், புதிதாக விண்ணப்பிக்கவும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம் ஆகும். அதனை உறுதிப்படுத்துவதற்காக, மருத்துவ கல்லூரிகளில் திடீர் ஆய்வுகளை மருத்துவ ஆணையம் நடத்தி வருகிறது. ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் பதிவு, சிசிடிவி கேமரா, உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்து அதன்பேரில், அங்கீகாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் கல்வியாண்டில் ஒரு கல்லூரியில் ஆய்வு நடத்துவதற்கு வேறு ஒரு கல்லூரி பேராசிரியரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அப்படி ஆய்வு நடவடிக்கைகளில் பங்கேற்க விருப்பமுள்ள மருத்துவ பேராசிரியர்கள் விவரங்களை அனுப்புமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவ ஆணையம் அறிவுறுத்திருந்தது. அதற்காக கடந்த 18-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அவகாசம் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் அந்த விவரங்களை பகிரலாம். அதற்கான இணையதள முகவரி மருத்துவ ஆணையம் பக்கத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story