ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி முத்தரப்பு பேச்சுவார்த்தை

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி முத்தரப்பு பேச்சுவார்த்தை
குமாரபாளையம் எடப்பாடி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எடப்பாடி  செல்லும் சாலை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. 80 அடி அகலத்தில் உள்ள சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகள் கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தற்காலிகமாக நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகள் அமைத்து வருகின்றனர். தற்பொழுது தார் சாலை பழுதடைந்துள்ளதால் மீண்டும் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குமாரபாளையம் எடப்பாடி செல்லும் சாலை தற்போது முக்கிய சாலையாக உள்ளது. தினசரி 160 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும், நூற்றுக்கு மேற்பட்ட தனியார் நூற்பாலை வாகனங்களும், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. மிக குறுகிய சாலையாக உள்ளதால் தினசரி விபத்துக்கள் ஏற்பட்டு கை கால் முறிவும், சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிதாக சாலை அமைக்க வேண்டும் என பொதுநல கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இருப்பினும் நெடுஞ்சாலை  அதிகாரம் இல்லை எனக்கூறி சாலை புதுப்பிக்கும் பணிகளை ஆரம்பித்தனர். இதனை கண்டித்து அனைத்து பொதுநல கூட்டமைப்பினர் சார்பில்,  சாலை  மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழ்நிலையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு நாட்களில் அமைதிக்  கூட்டம் நடத்தி சுமூக தீர்வு கண்டு, பின்னர்  ஆக்கிரமிப்புகள் அகற்றிய பிறகு சாலை புதுப்பிக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன் பின் சாலை மறியலை கைவிட்டு அனைத்து பொதுநல அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று தாசில்தார் சிவகுமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இது குறித்து ஒருங்கிணைபாளர் மகாலிங்கம் கூறியதாவது:  எஸ்.எஸ்.எம். மில் முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை ஆக்கிரமிப்பு அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் ஒப்புக்கொண்டனர். தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில் வரும் அளவிற்கு வடிகால் அமைப்பதாகவும், அடுத்த நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் மீதமுள்ள பகுதிக்கு வடிகால் அமைக்கப்படும் என்றும் உறுதி கூறினார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதில் பொதுநல ஆர்வலர்கள், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் நடராஜ், உதவி பொறியாளர் பிரவீன், நகராட்சி கட்டிட ஆய்வாளர் உதயகுமார், எஸ்.எஸ்.ஐ. மாதேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story