சேலம் கோர்ட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
Salem King 24x7 |25 Dec 2024 1:54 AM GMT
டி.ஜி.பி. உத்தரவு உடனடியாக அமல்
நெல்லை கீழநத்தம் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 23). வழக்கு ஒன்றுக்காக நெல்லை கோர்ட்டுக்கு கடந்த 20-ந்தேதி வந்தார். அப்போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல், கோர்ட்டு முன்பு அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த கொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. பின்னர், அனைத்து மாவட்ட கோர்ட்டுகளிலும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடுமையான உத்தரவை பிறப்பித்தது. இதனை உடனடியாக செயல்படுத்தவும் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கோர்ட்டுகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால், போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பணியில் அமர்த்த அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். சேலம் கோர்ட்டில் அதன்படி, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட்டுகளில் நேற்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கைத்துப்பாக்கியுடனும், மற்ற போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். இதுதவிர சாதி, மத மோதல்கள் காரணமாக குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் செயல்படும் தாலுகா அளவிலான கோர்ட்டுகள் கண்டறியப்பட்டு அங்கும் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, ஆத்தூர், சங்ககிரி, வாழப்பாடி போன்ற தாலுகா அளவில் செயல்படும் இதுபோன்ற கோர்ட்டுகளிலும் தேவைப்பட்டால் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்துவது குறித்து உரிய முடிவுகளை எடுக்கலாம் என உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Next Story