திண்டுக்கல் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பயிற்சி
Dindigul King 24x7 |25 Dec 2024 4:14 AM GMT
மதுரை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பயிற்சி
மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைமுறைகள் குறித்து அறியும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு அனுமதி அளிப்பது வழக்கம். முதன்முறையாக திண்டுக்கல் ஜி.டி.என். சட்டக் கல்லூரியில் 3 வருட சட்டப்படிப்பு படிக்கும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கான நேரடி கோர்ட்டு விளக்க பயிற்சி மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. கல்லூரி தாளாளர் ரத்தினம், இயக்குனர் துரை ஆலோசனையின் பேரில் 5 நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக மாணவ, மாணவிகள் தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒவ்வொரு கோர்ட்டிலும் நடந்து வரும் வழக்கு விசாரணை முறை குறித்து அறிய அனுமதி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பின் இறுதிநாள் நிகழ்ச்சியில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மாணவ, மாணவிகளுக்கு சட்ட நடைமுறை குறித்து கோர்ட்டு அறையில் விளக்கமளித்தார். முன்னதாக, ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க அலுவலகத்தில், மூத்த வக்கீல்கள் ஐசக் மோகன்லால், சாமி துரை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் முத்தரசு, அசோக், அரசு சட்டக்கல்லூரி முன்னாள் முதல்வர் அழகர்சாமி, மதுரை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்க செயலாளர் கிருஷ்ணவேணி, மதுரை பார் கவுன்சில் தலைவர் சுரேஷ். செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் சட்டம், கோர்ட்டு, வழக்கு நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சட்டக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர் சோழவந்தான் ரவிக்குமார். ஐகோர்ட்டு வக்கீல் அனிதா லட்சுமி தலைமையில் ஒருங்கிணைப்பு குழு வக்கீல்கள் செய்திருந்தனர். பயிற்சி வகுப்புக்கு அனுமதி அளித்த ஐகோர்ட்டு பதிவாளர், நிர்வாகம், நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு அலுவலர்கள் ஆகியோருக்கு ஜி.டி.என். கல்லூரியின்முதல்வர் டாக்டர் சீனிவாசன், துணை முதல்வர் சுடலை முத்து மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story