பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Kanchipuram King 24x7 |25 Dec 2024 12:24 PM GMT
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகளை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடில்லாத மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை வழங்க கோரி, பல மாதங்களுக்கு முன் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து, தகுதியான பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என, மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தாலுகா வாரியாக சிறப்பு முகாம் நடத்தி, தனித்துவ அடையாள அட்டை வழங்க வேண்டும். மாதம் ஒருமுறை கோட்டாட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் நேற்று, கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிர்வாகிகள், வில்சன், பாபு, முனுசாமி, பாலாஜி, அரிகிருஷ்ணன் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு நேரடியாக வந்த காஞ்சிபுரம் தாசில்தார் மோகன்குமார், மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளை தன் வாகனத்திலேயே அழைத்து சென்று, கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு வழங்க ஏற்பாடு செய்தார். கலெக்டரிடம் மனு அளித்து, தங்களது கோரிக்கை விபரங்களை, மாற்றுத்திறனாளிகள் கூறினர்.
Next Story