அமித் ஷாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம், ஆர்ப்பாட்டம்
Thanjavur King 24x7 |25 Dec 2024 12:25 PM GMT
காங்கிரஸ்
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்துப் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து, தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் செவ்வாய்க்கிழமை மாலை ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேல வஸ்தா சாவடியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியரகம் முன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், வேலையின்மை, விலைவாசி உயர்வு, அதானி மோசடி, மணிப்பூர், சம்பல் வன்முறையை விவாதிக்க மறுத்து, அரசியலமைப்பு சட்டச் சிற்பி அம்பேத்கரை அவமதித்து, நாடாளுமன்றத்தை முடக்கிய ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநகர மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி. வரதராஜன், துணைத் தலைவர் ஜி.லட்சுமி நாராயணன், பொருளாளர் ஆர்.பழனியப்பன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் ஏ.ஜேம்ஸ், வயலூர் எஸ்.ராமநாதன், மாவட்டப் பொதுச் செயலர்கள் செந்தில் சிவக்குமார், கண்ணன், செயலர்கள் வடிவேல், நாகராஜன், ரயில்வே தொழிற் சங்கம் அசோக் ராஜன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சாந்தா ராமதாஸ், நிர்வாகிகள் முருகையன், ஸ்ரீதர், மகேந்திரன், அன்பழகன், செல்வ சுப்பிரமணியன், எல். சம்பந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story