ஈரோடு மாநகராட்சியில் டெங்கு

ஈரோடு மாநகராட்சியில் டெங்கு
ஈரோடு மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் அதிகாரிகள் வேண்டுகோள்
ஈரோடு மாநகராட்சியில் ஏ.டி.எஸ் வகை கொசுக்கள் வாயிலாக, டெங்கு காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்த தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், வார்டுகளுக்கு நேரடியாக சென்று கொசுக்களை கட்டுப்படுத்தவும், டெங்கு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாக்கடை மேலும் கால்வாய் கழிவுநீரை அகற்றுவதோடு, கொசு புகை மருந்து அடித்தும், மருந்து தெளித்தும் வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபத்தில் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இந்நோய் பரவும் ஏ.டி.எஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே முட்டையிட்டு, ஒரு வார காலத்தில் பெருகின்றன. இவற்றின் வாயிலாக நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால், டெங்கு தடுப்பு பணிகள் மாநகராட்சி தரப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, டெங்கு பரவலை தடுக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக, டெங்கு பரவலை தடுக்கும் வகையில், வாரம் ஒருமுறை நீர் சேமிப்பு கலன்கள், தொட்டிகள், இதர நீர் தேங்கும் இடங்களில், பிளீச்சிங் பவுடர் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். நீர் தேங்கியுள்ள இடங்களில் டெமிபாஸ் என்ற மருந்து ஊற்றுவதின் வாயிலாக கொசுப்பெருக்கத்தை தவிர்க்கலாம். தொட்டிகள், குளிர்சாதன பெட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பாட்டில், தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள் போன்றவற்றில் நீர் தேங்காமல் பொதுமக்கள் அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story