குறை சொல்வது அண்ணாமலையின் பிறவிக் குணம் - அமைச்சர் கோவி.செழியன்
Thanjavur King 24x7 |26 Dec 2024 12:02 PM GMT
நிகழ்ச்சி
தஞ்சாவூரில், வியாழக்கிழமையன்று, புதிய கட்டடங்களை திறந்து வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள எல்லா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில், பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும், மாணவிகளின் நலன் குறித்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட மாணவி, பல்கலைக்கழகத்தில் உள்ள குழுவில் இரண்டு நாட்களுக்கு முன்பாக தெரிவித்து இருந்தால், துரிதமாக நடவடிக்கை எடுக்க வசதியாக இருந்திருக்கும். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் விளக்கமும், மேற்கொண்டு ஒரு மாணவி பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை மனதில் வைத்தும், அரசியல் செய்ய முற்பட்ட, பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு தரும் விளக்கம் என்னவென்றால், கடந்த காலங்களில் பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்திற்கு அப்போது இருந்த மாநில அரசே துணை நின்ற சம்பவம் உண்டு. நமது முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, பொள்ளாச்சி கூட்டு பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய போதெல்லாம் நிராகரித்து விட்டனர். ஆனால், அண்ணா பல்கலைக்கழக மாணவி, காவல் நிலையத்தில் புகார் அளித்த மூன்று மணி நேரத்தில், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இந்த அரசை பாராட்ட மனமில்லாமல், குறை சொல்பவர்களின் மனநிலை தான் குறையாக உள்ளதே தவிர, அரசு, பல்கலைக்கழகம் மற்றும் காவல்துறையினர் செயல்பாடு சிறப்பாக தான் உள்ளது. ஆனாலும், இன்னும் கவனமாக இருந்து மாணவிகள், மாணவர்கள் நலனுக்காக இந்த அரசு உறுதுணையாக இருக்கும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்யப்பட்டவர் தி.மு.க., பிரமுகர் என கூறுவது தவறான செய்தி. எது நடந்தாலும் குறை சொல்ல வேண்டும் என்பது அண்ணாமலையின் பிறவிக் குணம். மூன்று மாதம் அமைதியாக இருந்த தமிழகத்தில், மீண்டும் தனது குணத்தை அண்ணாமலை காட்டி வருகிறார். தி.மு.க., ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்பது இருந்தாலும், தனி மனித அத்துமீறல், வெறுப்பு விருப்புகள் அதிகரித்துவிட்டது. இருப்பினும், அதையும் கண்காணித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பாராட்ட வேண்டுமே தவிர, குறைகளை சொல்லி பேசுவது பயனில்லை" இவ்வாறு அவர் கூறினார்.
Next Story