அழகர்கோவில், மருதமலையில் நாள் முழுவதும் அன்னதானம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Chennai King 24x7 |27 Dec 2024 7:44 AM GMT
அழகர்கோயில், மருதமலை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமானது ஸ்ரீரங்கம் - ரங்கநாத சுவாமி கோயில், பழனி - தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், இந்த அரசு பொறுப்பேற்றபின், கடந்த 2021-ம் ஆண்டு திருச்செந்தூர் - சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் - மாரியம்மன் கோயில், திருத்தணி - சுப்பிரமணிய சுவாமி கோயில்களிலும், 2022-ம் ஆண்டு ராமேசுவரம் - ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை - அருணாச்சலேசுவரர் கோயில், மதுரை - மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களிலும், இந்த ஆண்டு ஜனவரியில் பெரியபாளையம் பவானியம்மன், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, ஆனைமலை மாசாணியம்மன் ஆகிய 3 கோயில்கள் என கூடுதலாக 9 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் விதமாக, அழகர்கோவில், கள்ளழகர், மருதமலை சுப்பிரமணியசுவாமி ஆகிய 2 கோயில்களில் இத்திட்டத்தை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், பழனி - தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பாக நடத்தப்படும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு பள்ளி மற்றும் 4 கல்லூரிகளில் மதிய உணவு வழங்கும் திட்டத்தையும் முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் 5,775 மாணவ, மாணவியர் பயன்பெறுவர். கல்லூரிகளில் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டம் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில்தான் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர்கள் எம்.எஸ்.சங்கீதா, கிரந்திகுமார் பாடி, ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story