கடன் தொல்லையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை
Dindigul King 24x7 |27 Dec 2024 3:49 PM GMT
நத்தம் அருகே விவசாயத்திற்காக வாங்கிய கடன் தொல்லையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோபால்பட்டி அருகே செட்டிப்பட்டி கன்னிமார் குட்டு பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி மகன் கருப்புச்சாமி (வயது 36). விவசாயியான இவர் விவசாய தேவைகளுக்காக பல இடங்களில் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் கடன் செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார். கடன் கொடுத்தவர்கள் கொடுத்த கடனை திருப்பி கேட்டு நெருக்கடி தந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். விவசாயத்தில் போதிய வருமானமும் இல்லை கடனை கட்டுவதற்கு வேறு வழியும் இல்லை என்பதால் வெறுப்படைந்த கருப்புசாமி அவரது தோட்டத்தில் உள்ள மா மரத்தில் மா மரங்களுக்கு மருந்து தெளிக்க பயன்படுத்தப்படும் நீளமான ரப்பர் பைப்பால் கழுத்தில் சுருக்கு மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த சாணார்பட்டி போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு 1 வயது, 3 வயது மற்றும் 7 வயதுள்ள 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story