மேலூரில் கட்டிமுடிக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராத புதிய பேருந்து நிலையம்: தினகரன் கண்டனம்
Chennai King 24x7 |27 Dec 2024 5:17 PM GMT
மதுரை மாவட்டம் மேலூரில் கட்டிமுடிக்கப்பட்டும் புதிய பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது. பொதுமக்கள் நலனில் அலட்சியம் காட்டும் திமுக அரசு நிர்வாகத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்கு உரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘மதுரை மாவட்டம் மேலூரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகள் முழுமையாக முடிந்த பின்னரும் திறக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால், பள்ளிக் குழந்தைகள் தொடங்கி கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினருமே வெயிலிலும், மழையிலும் பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 6.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மீது அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் மதுரை மேலூரில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்’ என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
Next Story