செஞ்சியில் பஞ்சமி நிலத்திற்கு பட்டா ரத்து செய்ய கோரி சாலை மறியல்

X
செஞ்சி அடுத்த செம்மேடு ஊராட்சியில் பஞ்சமி நிலத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும், பயன்பாட்டில் உள்ள சாலைக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும், கரடு முரடாக உள்ள சாலையை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து தலித் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் செஞ்சி தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர்.இதில் கலந்து கொள்ள வேலந்தாங்கல், கடலாடி தாங்கல், மேட்டுப்பாளையம் உட்பட 9 கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் காலை 11 மணியளவில் தாசில்தார் அலுவலகம் வந்தனர். அங்கு பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் இல்லை.இதையடுத்து விவசாயிகள் முன்னேற்ற இயக்க மாநில தலைவர் முத்து, சட்ட புலிகள் பேரவை நிறுவனர் சத்தியராஜ் ஆகியோர் தலைமையில தாசில்தார் அலுவலகம் எதிரே திண்டிவனம் சாலையில் தரையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.அங்கு வந்த செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் மறியல் செய்தவர்களை சமாதானம் செய்து தாசில்தார் அலுவலகம் அழைத்து சென்றனர்.பகல் 12.40 மணிக்கு விழுப்புரத்திற்கு சென்றிருந்த தாசில்தார் ஏழுமலை வந்தார். அவர் மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது சப் கலெக்டர் மூலம் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
Next Story

