இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Ariyalur King 24x7 |28 Dec 2024 6:49 AM GMT
இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர், டிச.28 - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர்(சிஐடியு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களான மணல், ஜல்லி, கம்பி, சிமென்ட், எம்.சாண்ட் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட வழங்கப்பட்டு வரும் ரூ.4 லட்சத்தை நிபந்தனை இல்லாமல் வழங்கிட வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் அமைக்க வேண்டும். அனைத்து உதவித் தொகைகளையும் தாமதமின்றி உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் நல வாரியத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். முன்னதாக அனைவரும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து பேரணியாகச் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் ஆர்.சிற்றம்பலம், எம்.சந்தானம், செயலர் மெய்யப்பன், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.மலர்கொடி ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். கட்டுமான சங்க மாவட்ட பொருளாளர் கே.கற்பகவள்ளி, துணைத் தலைவர்கள் எம்.செல்வராஜ், பி.தமிழரசி, துணைச் செயலர் சி.ஆதிலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். :
Next Story