என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் திமுக அரசு:எம்பி பேச்சு
Thoothukudi King 24x7 |29 Dec 2024 5:02 AM GMT
திமுக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்று கனிமொழி எம்பி கூறினார்.
திமுக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்று கனிமொழி எம்பி கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி மஹாலில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஆய்க்குடி அமர் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்பி பரிசுகள் வழங்கி, விழாவில் சிறப்புரையாற்றினார். விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: மாற்றுத்திறன் படைத்த ஒவ்வொருவருக்கும் தனித் திறமைகள் உண்டு என்பதை உணர்ந்துதான் மாற்றுத்திறனாளிகள் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பெயர் சூட்டினார். அது மட்டுமல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு என்று ஒரு துறையை உருவாக்கி, அந்தத் துறையை அவர் கையில் வைத்துக் கொண்டார். அதேபோன்று தான், திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மாற்றுத்திறனாளி துறையைத் தனது கையில் வைத்துக்கொண்டு அவர்கள் கேட்கும் அனைத்து உதவிகளையும், பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக அரசு நிறைவேற்றி வருகிறது. திமுகவும், திமுக அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்றார். விழாவில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அமர் சேவா சங்க செயலாளர் சங்கரநாராயணன், நகர் மன்றத் தலைவர் கருணாநிதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story