புதிய சாலை தரமாக அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியம் கூடலூர் ஊராட்சியில் பேரூர் கிராமத்திலிருந்து திருமலை ரெட்டியப்பட்டி வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. இதில் தற்போது பேரூரில் இருந்து கூடலூர் ஊராட்சி வரை சாலை பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் பழைய கற்களை அகற்றாமல் சாலையின் இரு புறங்களிளும் சுமார் இரண்டு அடி உயரத்தில் காங்கரீட் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் தாழ்வான நிலையில் இருந்து வருகிறது. மழை காலங்களில் பல்வேறு பகுதியில் இருந்து மழை தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வந்தது. தற்போது அமைக்கும் சாலை பணி மேலும் இரண்டு அடி உயரத்தில் அமைக்கப்படுவதால் குடியிருப்பு பகுதிகள் மேலும் பள்ளத்தில் இருக்கும் சூழல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். புதிய சாலை பணியின் போது பழைய கற்களை முழுமையாக அகற்றிவிட்டு புதிய சாலை அமைத்தால் சாலையின் இரு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள் சமமாக இருக்கும் மழை காலங்களில் மழை தண்ணீர் வீட்டிற்குள் போகாமல் தடுக்க முடியும். பொதுமக்கள் பாதிப்பை தடுக்கும் வகையில் தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அறிக்கையின்படி புதிய சாலை பணி தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக பொதுமக்கள் தோகமலை ஊராட்சி ஒன்றிய ஆணையர், ஒன்றிய பொறியாளர் ஆகியோரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் சாலை பணி குறித்து நேரில் வராமல் தரமற்ற சாலை பணிக்கு உடந்தையாகவும் இருந்து வருவதாக பொதுமக்கள் சரமாரி புகார் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் புதிய சாலை பணி அமைய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் சார்பில் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் செந்தில்குமார், சரவணன், ஜெயராஜ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story