மூதாட்டி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு சிறுவர்கள் கைது*

X
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு சிறுவர்கள் கைது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வெள்ளையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்பவரை மனைவி சுப்புலட்சுமி(67). ராமகிருஷ்ணன் காலமானதால் அவரது மனைவி சுப்புலட்சுமி ஊருக்கு ஒதுக்குப்புறமான வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் தேனியிலும், மற்றும் மகள் ஓசூர் பகுதியிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சுப்புலட்சுமி தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி அவரது வீடு பூட்டியே கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் பந்தல்குடி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவைத் திறந்து பார்த்ததில் மூதாட்டி சுப்புலட்சுமி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவரது உடலை போலீசார் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுப்புலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க நகை மட்டும் திருடு போயிருந்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து ஏ.எஸ்.பி மதிவாணன் தலைமையில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் பலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் போலீசார் பந்தல்குடியில் உள்ள முனியாண்டி கருப்பசாமி கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் போலீசாரை கண்டதும் திடீரென தப்பி ஓடி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் இருவரும் சேர்ந்து மூதாட்டி சுப்புலட்சுமி கொலை செய்தது தெரியவந்தது. போதைக்கு அடிமையான இரண்டு சிறுவர்களும் போதை பழக்கத்திற்காக பணம் தேவை என்பதால் மூதாட்டி சுப்புலட்சுமியை கொலை செய்து நகையை திருடி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
Next Story

