போஸ்டர் ஒட்டி எச்சரிக்கை விடுத்த போலீசார்
Chengalpattu King 24x7 |30 Dec 2024 2:49 PM GMT
போஸ்டர் ஒட்டி எச்சரிக்கை விடுத்த போலீசார்
செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான இடைக்கழிநாடு, பவுஞ்சூர், கூவத்துார் உள்ளிட்ட பகுதிகளில், அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன.ஆண்டுதோறும் இப்பகுதியில் பிப்., முதல் ஜூலை மாதம் வரை, சட்ட விரோதமாக பனை மரத்தில் இருந்து கள் இறக்கி, விற்பனை செய்து வருகின்றனர். மதுராந்தகம் மதுவிலக்கு அமல் பிரிவு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த பகுதியில், கள் இறக்கி விற்பனை செய்யும் சிலர் மீது வழக்கு பதிந்து கைது செய்து, சிறையில் அடைப்பது வழக்கம். இருந்த போதிலும், தடையின்றி இப்பகுதியில் தொடர்ந்து கள் கிடைக்கும் என்பதால் சென்னை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் இப்பகுதிக்கு வந்து கள் வாங்கிச் செல்வர்.கடந்த ஆண்டு 1 லிட்டர் கள் 50 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது, கள் சீசன் துவங்க உள்ளது. இந்நிலையில், மதுராந்தகம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், கள் விற்பனை தொடர்பாக எச்சரிக்கை போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதில், செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில் கள் இறக்குபவர்கள் மற்றும் கள் விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர். மேலும் 50,000 ரூபாய் அபராதம் மற்றும் வங்கி கணக்கு முடக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொது இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
Next Story