ஊத்துக்கோட்டை சாலை பள்ளங்களில் துணி கட்டி எச்சரிக்கை

ஊத்துக்கோட்டை சாலை பள்ளங்களில் துணி கட்டி எச்சரிக்கை
ஊத்துக்கோட்டை சாலை பள்ளங்களில் துணி கட்டி எச்சரிக்கை
சென்னை - நெல்லுார் தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன்சத்திரம் பகுதியில் இருந்து, இடதுபுறம் சாலையில், 31 கி.மீட்டர் துாரத்தில் உள்ளது ஊத்துக்கோட்டை. தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள இப்பகுதியில் இடையே, மஞ்சங்காரணை, தாணாகுளம், கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், தாராட்சி, தொம்பரம்பேடு மற்றும் இணைப்பு சாலை வழியே, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம், கால்நடை வளர்த்தல், பூக்கள் பயிருடுதல். இங்கு பயிரிடப்படும் பயிர்கள், பூக்கள் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், திருப்பதி, கடப்பா, கர்நுால், பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மேற்கண்ட சாலை வழியே பயணிக்கின்றன. தினமும், இச்சாலையை, 15,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இச்சாலையில், சூளைமேனி என்ற பகுதியில் இருந்து வடதுபுறம் செல்லும் சாலையில், தேர்வாய் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது. மூலப்பொருட்கள் எடுத்து செல்லுதல், தொழிலாளர்கள் செல்லுதல் என, தினமும், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், குண்டும் குழியுமாக உள்ளது. அவ்வப்போது மழை பெய்து வருவதால், இந்த பள்ளஙகளில் மழைநீர் சேர்ந்து குட்டை போல காணப்படுகிறது. சில இடங்களில் பெரிய பள்ளங்களில் பகுதிவாசிகள் சிவப்பு துணி கட்டி அபாய பகுதியாக காட்டி உள்ளனர். ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை இடையே, 31 கி.மீட்டர் கடக்க மூன்று மணி நேரம் ஆகிறது. மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் உள்ள இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story